Published On: Fri, Feb 10th, 2012

உங்கள் வீட்டில் திருமணமா? பிறந்தநாளா?

 

இப்படிப்பட்ட ஒரு தலைப்பை நீங்கள் எமது இணையத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் தலைப்பு மட்டும் முளுதாக படிப்பதற்கு முன் ஆச்சரியமானதாக இருக்கலாம் ஆனால் இக்கட்டுரையை படித்து முடித்த பின்பு இது சரியான தலைப்பு என்பது உங்களுடைய கருத்ததாகவும் இருக்கும்.

எம்முடைய ஒரு புது மொழியை கூறுகின்றோம் சரியா என கூறுங்கள் ” அன்று ஓரே தலைவர் அனைத்து தமிழர்களுக்கு இன்று ஒன்பது தலைவர்கள் ஒவ்வொரு தமிழனுக்கும்” எம்முடைய இந்தப் புது மொழி இந்த காலகட்டத்திற்கு கட்சிதமாக பொருந்தும் இதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

தலைப்பிற்கும் இந்த புதுமொழிக்கும் தொடர்பு இருக்கின்றது அதாவது சில வருடங்களின் முன்னர் அறிக்கை என்றால் என்னவென்று பலருக்கு தெரியவே தெரியாது. அறிக்கை என்றால் என்ன அது எவ்வளவு பலமான விடயம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தலைவர்களுக்கும் தெரியும்.

அதனாலேயே மற்ற நாடுகள் ஏனைய நாட்டு தலைவர்கள் அறிக்கை விடுகின்றார்கள் என்றவுடன் பெரும் ஆவல் காட்டுவார்கள் தலைவர்கள் என்று இல்லை பலம் பொருந்திய அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் என்றாலும் பல நாடுகள் அவ் அறிக்கைகளை அறிந்துகொள்ள ஆவல் கொள்ளும்,அதன்படி நடப்பதாக உறுதியும் அளிக்கும்.

சில அறிக்கைகள் ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றும் வல்லமை கொள்ளும் சில அறிக்கைகள் மாபொரும் அழிவிற்கு வழிவகுக்கும் அறிக்கைகளுக்கு அவ்வளவு பலம் உண்டு அதனாலேயே பல அறிக்கைகளை கண்டு பெரும் நாடுகளும் தலைவர்களும் நடுங்குவதுண்டு.

அதே நடுக்கமும், பெரும் ஆவலும் சில காலங்கள் முன்வரை தமிழர்களின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு இருந்தது. பெரும் பலம் வாய்ந்த அறிக்கைகள் தமிழர்களிடமும்  இருந்தது. ஒவ்வொரு அறிக்கையையும் எதிரி மட்டுமல்லாமல் உலகமே உற்று அவதானித்ததோடு குறிப்புகளும் எடுத்துக்கொண்டு தமது நாட்டு தலைவர்களுக்கு பாடம் எடுக்கும்.  அப்பேர்ப்பட்ட பலம் சில வருடங்கள் முன் தமிழர்களின் அறிக்கைக்கும் இருந்தது என்பது இன்று வரலாறாக மட்டுமே போய்விடுமே என்ற அச்சம் எம்மிடம் உண்டு உங்களுக்கு அப்படி ஒரு சிந்தனை வந்திருக்கலாம். தமிழர்களின் தலைமையிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளிவர போகின்றதென்றால் எதிரியின் தலைமைக்கு குலைநடுங்கும், உலக தலைவர்கள்,ஊடகங்கள் காத்துக்கிடக்கும். அந்த அறிக்கையை வைத்துக்கொண்டு உலக ஊடகங்கள் தமிழர்களின் எதிரிகளை கேள்விக் கனைகளால் துளைத்தெடுக்கும்.

அந்த அறிக்கையைப் பற்றி பக்கம் பக்கமாக பல ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் புத்தகங்கள், இணையங்கள் ஊடாக எழுதித் தள்ளுவார்கள். தொலைக்காட்சிகளில், அரங்குகளில் நேரடி விவாதங்கள் அவ் அறிக்கையை பற்றி விவாதிக்கப்படும் அப்படிப்பட்ட  மாபெரும் பலம் சில ஆண்டுகள் முன்பு வரை தமிழர்களின் தலைமை வெளியிடும்  அறிக்கைகளுக்கு  இருந்து வந்தது.

ஆனால் இன்று  எந்த அறிக்கையை பற்றி விவாதிப்பது என பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு அறிக்கைகள் பல முனைகளில் பல அமைப்புகளிடம் இருந்து  வெளியிடப்படுகின்றது. ஒரு வாரத்திற்கே பல அறிக்கைகள் விடும் அமைப்புகளும் தற்போது அதிகரித்துள்ளது.

இன்னும் சில அமைப்புகள் இன்று என்ன காரணத்தை வைத்து அறிக்கை வெளியிடுவது என காத்துக்கிடக்கின்றது. அதனாலேயே உங்கள் வீட்டில் திருமணமா பிறந்தநாளா என கேட்டிருந்தோம், உங்கள் வீட்டில் நடக்கும் விழாக்களை பற்றி இவ் அமைப்புகளுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் உங்கள் வீட்டு விழாவுக்கு அறிக்கை விட வாய்ப்புள்ளது, ஆனால் நீங்கள் விழாவின் கணக்கை சரியாக கணக்கு காட்ட வேண்டும் இல்லாவிட்டால் புகழ்ந்து அறிக்கை விட்டவர்களே கண்டன அறிக்கையும் விட தவறமாட்டார்கள். ஆம் உண்மைதான் விட்டால் திருமணம், பிறந்தநாளுக்கும் இவர்கள் அறிக்கை விடுவார்கள் போல்தான் உள்ளது.

தினசரி இணையங்களை உற்றுப் பாருங்கள் உருப்படியாக மக்களுக்கோ அல்லது போராட்டங்களோ செய்யாவிட்டாலும் அறிக்கை போராட்டங்கள் மட்டும் எவ்வித வெட்கமும் இல்லாமல் வெளியிடுவார்கள். இவர்களால் அனுப்பப்படும் அறிக்கைகளை வெளியிடாவிட்டாலும் வெளியிடத் தவறிய இணையங்களுக்கு இந்த அமைப்புகள் அறிக்கைகள் விடும்.

எந்தெந்த அமைப்புகளை சொல்கிறீர்கள் என நீங்கள் முனுமுப்பதும் கேட்கிறது இணையங்களைப் பாருங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள் அதைப்போன்ற சில அமைப்புகளை இணையங்களில் மட்டுமே நீங்கள் காண முடியும் ஒரு சில அமைப்புகள் மட்டும் உங்களை கடந்து கடந்து போகும் மற்றவர்கள் செய்வதை தாங்கள் செய்ததாக உரிமை கோருவார்கள் கவனமாக இருங்கள் சில வேளைகளில் நீங்கள் செய்த நல்லவற்றையும் இந்த அமைப்புகள் உரிமைகொண்டு’ஆடும்’.

பி.கு -1- எந்த அமைப்பையும் குறிப்பிட்டு எழுதப்பட்டவை அல்ல உங்களுக்கு சுட்டுவிட்டால் நாம் குறிப்பிட்ட அமைப்புகளில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நீங்களும் ஒன்றுதான்.

பி.கு-2- இது அறிக்கை அல்ல

நாங்கள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

http://rste.org/

History of Prabakaran & LTTE