Published On: Mon, Feb 20th, 2012

கண்கள் விழித்திருப்பதல்ல ஓர் இரவாவது அறிவை விழிப்படைய செய்வதே சிவராத்திரி

அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் தப்புவதற்காக ஒரு பிராமணன் விழித்திருந்த இரவு..

நமது நாட்டு கலண்டர்களில் சிவராத்திரிக்கு ஒரு சித்திரம் வரைந்திருப்பார்கள். ஒரு பிராமணன் வில்வ மரம் ஒன்றில் ஏறியிருப்பான். அவனுடைய கைகளில் இருந்து இலைகள் மரத்தின் கீழே உள்ள சிவலிங்கத்தில் விழுந்து கொண்டிருக்கும். மரத்தின் கீழ் ஒரு புலி அவனையே பார்த்தபடி இருக்கும். அவனுடைய வாயில் இருந்து சிவ.. சிவ.. என்ற நாமம் வந்து கொண்டிருக்கும்…

கலண்டரைப் பார்த்ததும் இன்று சிவராத்திரி என்று தெரிந்து கொள்வோம்..

யாரிந்தப் பிராமணன்.. ? இவனுடைய கதை என்ன..? பாட்டி சொன்ன கதை..

காட்டு வழியாக ஒரு பிராமணன் சென்று கொண்டிருந்தான், அவனை ஒரு புலி விரட்ட ஆரம்பித்தது. வேகமாக ஓடிச்சென்று வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். அவன் கீழே இறங்குவான் என்று புலி மரத்தின் கீழே விழித்துக் காத்திருந்தது.

மரத்தில் இருந்த பிரமணனுக்கு உறக்கம் வந்தது. அவன் வில்வ மரத்து இலைகளை பறித்து சிவ சிவா என்றபடி கீழே போட ஆரம்பித்தான். மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது அவனுக்கு தெரியாது. அதுபோல அந்த நாள் சிவராத்திரி என்றும் அவனுக்கு தெரியாது.

ஆனால் அவன் சிவராத்திரியன்று விழித்திருந்து வழிபட்ட காரணத்தால் புலியை விரட்டுகிறான் இறைவன்.. பின் அவனுக்கு மோட்சமும் கிடைக்கிறது.

ஆக..

சிவராத்திரியன்று கண்விழித்திருந்தால் சிவனுடைய அருள் கிடைக்கும் என்ற செய்தி மனதில் பதிந்து கொள்கிறது.

ஆனால்…

சிவராத்திரி நாள் தெரியாமல் காட்டில் அலைந்தவன் உண்மையான பிராமணனா..?

புலி மனிதர்களைவிட அமோகமாக மரத்தில் ஏறும் ஆற்றல் கொண்டது.. மரமேறத் தெரியாத புலி அங்கே எப்படி வந்தது.. ?

பிராமணனுக்கு மட்டும் மோட்சம் கொடுக்கும் சிவன் அந்த இரவு முழுவதும் விழித்திருந்த புலிக்கு மட்டும் ஏன் மோட்சம் கொடுக்கவில்லை..?

கடவுளிடமும் பிராமணன் மிருகம் என்ற ஜாதிப்பாகுபாடு இருக்கிறதா..?

இப்படி மனது பல கேள்விகளை கேட்கிறது.. ஆனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை.. காரணம்..

கேள்வி கேட்டால் அடி.. பின்னாளில் வெடி.. என்ற இனத்தில் வந்ததால் கதைகளை மட்டும் அப்படியே ஏற்றுக் கொள்கிறது மனம்.

சிவராத்திரி வந்துவிட்டது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம்… ?

சிறுவர்கள் வீட்டுக்கு வீடு கண்விழித்திருக்க முடிவு செய்வார்கள்..

ஊஞ்சல் கட்டி ஆடுவது, விசேட உணவு செய்து உண்பதென அறுபதுகளில் இருந்த சிவராத்திரி எழுபதுகளில் கோழி, ஆடு நூடில்ஸ் போடுமளவுக்கு விரிவடைந்தது..

சமுதாயம் மேலும் ஒரு படி முன்னேறியது…

சிவராத்திரி வந்தால் திரையரங்குகளில் நள்ளிரவு காட்சி போடுவார்கள்.. ஒரு சிவராத்திரிhக்கு எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஷாக்காரன் பார்த்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியே வந்தபோது காலை ஏழு மணி சூரியன் அமோகமாக உதித்துக் கொண்டிருந்தது..

மேலும் ஊரில் இரவு நேரங்களில் சிவராத்திரிப் புயல் வீசும்..

சிவராத்திரியின் வேடிக்கைகளை அனுபவிக்காமல் ஆலயங்கள் சென்று வழிபடும் வயோதிபர்களை நினைத்தால் அக்காலத்தில் பரிதாபமாக இருக்கும்..

இளைஞர்களும், சிறுவர்களும் படலைகளை பிடுங்கி வீசியிருப்பார்கள். மரக்குற்றிகளை உருட்டி வீதிகளில் விட்டிருப்பார்கள். வீதியில் நிற்கும் மாட்டு வண்டிகளை எங்கோ இழுத்து சென்றிருப்பார்கள்.. இப்படி பல்வேறு புயல் அனர்த்தங்கள்..

ஏன்..? நாம் விழித்திருக்க வேண்டுமல்லவா..?

எண்பதுகளில் ஊஞ்சலாட்டமும் நின்று.. திரைப்படக் காட்சிகளும் நின்று, சிங்கள இனவாத இராணுவத்தின் படுகொலை வெடிகள்… வருடம் முழுவதுமே படுக்க முடியாத சிவராத்திரியாக மாறி, எது சிவராத்திரி எது நவராத்திரி என்று தெரியாதளவுக்கு வாழ்வு சீரழிந்தது..

இருந்தாலும்..

பல பதிலற்ற கேள்விகளுக்கு நமது செயல் முறைகளால் பதில் தந்திருக்கிறோம் என்பதே அந்த நிகழ்வுகள்.

இதற்குக் காரணம்..

ஏனென்று தெரியாமல் சிவராத்திரியை கொண்டாடியபோதுதான் பிராமணனுக்கு மோட்சம் கிடைத்தது..

ஆகவேதான் நாமும் ஏனென்று கேட்காமல் எம்.ஜி.ஆர் படம் பார்த்து சிவராத்திரி கொண்டாடினோம்..

பிராமணன் கைக்குக் கிடைத்த வில்வமர இலையை பிடுங்கியது போல நாமும் நம்மூர் பூவரசுகளையும், பப்பாசிகளையும் இரவோடு இரவாக வேடிக்கையாக முறித்து வீசி சிவ பூஜை செய்தோம்..

தினசரி பாடசாலையில் அடிபோடும் நடராசா வாத்தியார் வீட்டுக்கு கல்லெறிந்துவிட்டு, அவர் விரட்ட புலிக்கு பயந்த பிராமணன் போல ஓட்டமெடுத்தோம்..

நடராசா வாத்தியார்தான் சிவனா..? அவர் வீட்டுக்கு நாம் எறிந்த கற்கள்தான் வில்வ மர இலைகளா..?

சிவராத்திரியை இப்படியாக நாம் தப்புத் தப்பாகக் கொண்டாடியது சரியா.?

இல்லை, நாம் தப்பான ஒரு சமுதாய வாழ்வைத்தான் வாழ்ந்தோமா..? இப்படி சிவராத்திரி நம் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது..

அந்தச் சிவராத்திரிக் கேள்விகள் உள்ளத்தின் கும்மிருட்டுக்களுக்குள் மெல்லிய ஒளி பாய்ச்சுகிறது..

சிறு பிள்ளைகளின் கேள்விகளுக்கு நாம் சரியான பதில் கொடுக்காவிட்டால் பதில் கிடைக்காத வெற்றிடத்தை அவர்கள் தப்பான முறையில் வாழ்ந்து பார்க்க தலைப்படுவார்கள்.

நித்திரை வராமல் இருக்க மர இலைகளை புடுங்கி வீசிய ஒரு பிராமணனுக்கு மோட்சம் கிடைத்ததுதானே.. நாமும் நித்திரை வராமலிருக்க ஏதாவது செய்யலாம் என்ற இடத்திற்கு குழந்தைகள் உளவியல் வழி நடாத்தப்பட அந்தக் கதை காரணமாயிருந்திருக்கிறது.

ஒரு கலண்டன் தாளில் படத்தை வரையும்போது கூட நாம் எவ்வளவு சமுதய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை சிவராத்திரி படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது..

சிவராத்திரிக்கு ரிக்ஷாக்காரன் படம் பார்த்து சிவபதம் அடையலாம் என்று நினைத்த நமது சமுதாய அறிவு ஒரு நாள் புலிக்கும், சிங்கத்துக்கும் பயந்து ஓடி வில்வமரத்தில் ஏற வேண்டிய நிலையையே உருவாக்கும் என்பதை இன்றைய புலம் வில்வமர வாழ்வு நமக்கு தெட்டத் தெளிவாக விளக்குகிறது..

அன்று புலிக்கு பயந்து வில்வ மர இலைபோட்டு முத்தியடைந்த பிராமணனின் வாழ்வுக்கும் இன்றைய புலம் பெயர் வாழ்வுக்கும் நல்லதோர் ஒப்புமை இருப்பதை சிவராத்திரி அழகாக எடுத்துரைக்கிறது..

இப்படி சிவராத்திரி பல சிந்தனைகளை உருவாக்குகிறது.. அந்த சிந்தனையின் கொடுமுடியில் ஒரு கேள்வி பிறக்கிறது..

ஆம் சிவராத்திரி என்றால் என்ன..?

கண்கள் விழித்திருப்தா..?

இல்லை..

ஓர் இரவாவது உன் அறிவை விழித்திருக்க செய்.. இதுதான் சிவராத்திரி.

அனைத்து..
பம்மாத்துக்கள்..
மூட நம்பிக்கைகள்..
இனவாதம்..
மதவாதம்..
போதை வஸ்த்து..
சகோதர, குடும்ப சண்டைகள்..
என்னைவிட நீ பெரிதா என்று ஒப்பீடு செய்வது..

போன்ற அத்தனை மூடத்தனங்களையும் கண்விழித்துப் பார்த்து நீ திருந்திக் கொள்ள வேண்டிய அறிவியல் விழிப்பின் ராத்திரியே சிவராத்திரி…

அறிவு அற்றம் காப்பது என்பார் வள்ளுவர்..

ஆம்..

உங்களை அழிவில் இருந்து காப்பதே அறிவு..

தன்னை அழிவிலிருந்து காக்க விழித்திருந்த ஒரு பிராமணன் போல உங்களை அழிவில் இருந்து காக்க வழி தேடும் அறிவியல் விழிப்பு நிலையே சிவராத்திரி.

அலைகளுக்காக…
கி.செ.துரை. 20.02.2012

History of Prabakaran & LTTE