Published On: Wed, Feb 22nd, 2012

ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த ஊடகவியலாளர் சிரியாவில் கொலை

 

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார்

சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோம்ஸ் நகரில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே ஊடகவியலாளர் மேரி கொல்வினும், பிரெஞ்சு படப்பிடிப்பாளரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்றாம்கட்ட ஈழப்போரின் இறுதிப்பகுதியில்- 2001 ஏப்ரல் மாதம் வன்னிப் பகுதி நிலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த மேரி கொல்வின், வவுனியாவில் முன்னரங்க நிலையைக் கடக்க முயன்றபோது, சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து  ஒரு கண்ணை இழந்திருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்டோருடன் இவர் இறுதிவரை தொடர்பில் இருந்தவர் என்பதுடன் அதுபற்றிய உண்மைகளையும் வெளிப்படுத்தியிரந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டபோது தன்னை மயக்காமல் அவசர கண் சத்திர சிகிச்சையை செய்ய அவர் துணிச்சலோடு அனுமதித்தார். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.

பிரித்தானியாவின் முன்னணி ஊடகமான சண்டே டைம்ஸ், டைம்ஸ் ஒன் லைன் ஆகிய நிறுவனங்களுக்கு இவர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.

2009ம் ஆண்டு புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தில், வெள்ளைக்கொடியோடு செல்லவிருந்த புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார்.

அவர்கள் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

கோத்தபாய ராஜபக்ஷவிடம் இருந்து, சில உத்தரவாதங்களை இவர் பெற்று, பின்னர் புலித்தேவனோடு தொடர்புகொண்டு சில தகவல்களையும் இவர் பரிமாறி இருந்தார்.

இருப்பினும் இராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடைந்தவர்களைக் கொலைசெய்தபோது, தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளது என முதல் முதல் அறிவித்தவரும் இவரே ஆவார் !

ஐ.நா அதிகாரிகளுடன் இரவிரவாகப் பேசி, சரணடையும் புலிகளை, மற்றும் மக்களையும் காப்பாற்ற இவர் அரும்பாடுபட்டார்.

தமிழர்கள் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்படுவதை இவர் வெளிச்சம்போட்டுக் காட்டினார்.

அவர் தமிழர்களுக்கு செய்த பல உதவிகள் இன்னும் வெளிவராமல் இருட்டில் இருப்பதை ஒரு சிலரே அறிவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.

History of Prabakaran & LTTE