Published On: Sun, Feb 26th, 2012

த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது

ஜெனிவா ஐ.நா.சபையில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரிpல் கலந்து கொள்ளாததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களகப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி காட்டமாத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது மக்களை அழித்து படுகொலை செய்த சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் இம்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கியமான தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு உலக நாடுகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன. அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானத்தில் உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கப்போகின்றன.

இந்த விடயமே தற்போது உலக நாடுகளில் முக்கிய செய்தியாக உள்ளது. ஆனால் இந்தியா இலங்கைக்கு சார்பாக ஐ.நா.வில் நடந்து கொள்ளும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நாவில் இடம் பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்துக் கூறுவதில்லை என அறிவித்துள்ளது. இத்தீர்மானம் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு செய்துள்ள துரோகமாகவே அமைந்துள்ளது.

முள்ளிவாய்காலில் கண்முன்னே இடம் பெற்ற மனிதப் படுகொலைகளை ஐ.நாவில் எடுத்துக் கூறத்துணிவில்லாமல் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு செயற்பட்டு வருகின்றன. இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகவே கருதப்படும்.

வடகிழக்கு மக்களால் இன்றைய நிலைமை பற்றியோ அல்லது தமது உரிமை பற்றியோ எதுவும் பேச முடியாத நிலையிலேயே அவர்கள் தமது பிரதிநிதிகாளக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவு செய்துள்ளனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பால் தமது சுயநல அரசியலுக்காகவும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் சுயநலத்திற்காகவும் செயற்பட்டு வருகின்றனர். இது மிகமோசமான துரோகமாகவே அமைந்துள்ளது.

எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு உலகநாடுகள் அனுசரணையாக இருந்தன. தற்போது அதை உணர்ந்துள்ள சர்வதேச சமுகம் தமி;ழ் மக்களுக்கு உரிமை வழக்க வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையிலேய ஐ.நாவில் இடம் பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்து கொள்ளாதது “வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதையாகவே அமைந்துள்ளது. புலம் பெயர் தமிழ் மக்கள் இன்று ஒன்று பட்டு உரிமைக்காக போராடி வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

—————————————

அருமையான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது – கஜேந்திரகுமார் கண்டனம்!

 இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.
ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது,தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதொரு காலகட்டம் இதுவாகும். சர்வதேசத்தின் பார்வை முழுமையாக இலங்கைத் தீவின் மீது இன்று விழுந்திருக்கின்றது. இந்த நிலையில் 60 வருட காலமாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று கிடைத்திருக்கின்றது.

எனவே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற கோணத்தில் எமது மக்கள் சர்வதேசத்திடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் பதிவு செய்ய வேண்டிய கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. ஆனால் இந்தக் கடமைப்பாட்டை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியிருக்கின்றது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சோகமளிக்கக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப் போவதாக அறிகின்றோம்.

எனவே இந்த ஜெனிவா மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை அவர்களுடைய மனோநிலையை வெளிப்படுத்த முடியாத போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி இருப்பதும், இல்லாமல் போவதும் ஒன்றே. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு தமிழ் மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது’ என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதில் எவ்வித தடைகளையும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

History of Prabakaran & LTTE