பிடல் காஸ்ட்ரோ மகிந்த ராஜபக்சேவை சந்தித்தால் என்ன சந்திக்காவிட்டால்தான் என்ன?
பிடல் காஸ்ட்ரோவும் மகிந்த ராஜபக்சேவும்
கியூபப் புரட்சியின் தலைவரான பிடல் காஸ்ட்ரோ இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவைச் சந்திக்க மறுத்துவிட்டதாக இலங்கை-புகலிட இணையங்களில் செய்தி வந்திருக்கிறது. இந்தச் செய்தியில் இருக்கும் தொனி யாதென நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ இனக்கொலையாளியான மகிந்தாவைச் சந்திக்க மறுத்துவிட்டார் என நம்புவதற்கு இத்தகைய செய்திதருபவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்கான கியூப ஊடகம் அல்லது அரசு சார்ந்த ஆதாரங்கள் என எதுவும் உண்டா எனில் இல்லை என்பதுதான் பதில்.
ரேடியோ ஹவானா உள்ளிட்ட கியூப ஊடகங்களும், இலத்தினமெரிக்க ஊடகங்களும் மகிந்த ராஜபக்சேவின் கியூபப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. கியூபப் படைகளின் தளபதியும் கியூப அரசின் தலைவருமான ராவுல் காஸ்ட்ரோ மகிந்த ராஜபக்சேவைச் சந்தித்திருக்கிறார். சேகுவேராவின் மனைவி அலிடா மார்ச்சேவும், சேவின் புதல்வர் கமில்லாவும் மகிந்தாவைச் சந்தித்திருக்கிறார்கள். சே குவேராவின் இரு நூல்களை அலீடா மார்ச்சே மகிந்த ராஜபக்சேவிடம் கையளித்திருக்கிறார்.
அரசுமுறைப் பயணம் எனும் அளவில் கியூப அரசினால் மகிந்த ராஜபக்சே கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இதுவே இன்றைய அரசியல் யதார்த்தம்.
பிடல் காஸ்ட்ரோ மகிந்த ராஜபக்சேவைச் சந்திக்காமைக்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை. பிடல் காஸ்ட்ரோ இலங்கை அரசு குறித்தோ அல்லது மகிந்த ராஜபக்சேவின் இனக்கொலை நடவடிக்கை குறித்தோ எந்த விமர்சனமும் கொண்டவர் இல்லை. பிடல் மகிந்தாவைச் சந்திக்காமைக்கு அவரது உடல் நலம், அவர் ஏற்கனவே அமைத்துக் கொண்டிருக்கும் அன்றாடத் திட்டங்கள் என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
எவையென்றாலும் பிடல் மகிந்தாவைச் சந்திக்காமல் போனதற்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை.
பிடல் காஸ்ட்ரோவின் இன்றைய வெளியுறவுக் கொள்கை கருத்தியல் அடிப்படையிலானது இல்லை. அமெரிக்க எதிர்ப்பும் தனது நாட்டின் அரசியல் பொருளியல் நலன்களும்தான் இன்று அவருடைய கியூபாவின் வெளியுறவுக் கொள்கை. மகிந்த ராஜபக்சேவை பிடல் சந்தித்திருந்தாலும் அவர் இன்றைய இலங்கையின் ‘பயங்கரவாத எதிர்ப்பு‘ தமிழர்கள் அழிப்புக்கு ஆதரவாகத்தான் பேசியிருப்பார்.
இதுவே அரசியல் யதார்த்தம். மற்றெல்லாம் மனோரதியமான விருப்பங்கள்.
தனது சொந்த நாட்டு மக்களின் மீது விமானத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த வேளையிலும் முவம்மர் கடாபியை ஆதரித்துத்தான் பிடல் காஸ்ட்ரோ கட்டுரை எழுதினார். ஈராக்கிய கம்யூனிஸ்ட்டுகளை சத்தாம் குசைன் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது பிடல் காஸ்ட்ரோ சத்தாம் குசைனை ஆதரித்துத்தான் பேசினார். முள்ளிவாய்க்கால் படுகொலையை அவரது அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தவெற்றி என்றுதான் வரவேற்றது. இந்த நிலைமையில் மகிந்த ராஜபக்சேவை பிடல் காஸ்ட்ரோ சந்தித்தால் என்ன அல்லது சந்திக்காவிட்டால்தான் என்ன?
அதற்கு என்ன அரசியல் முக்கியத்துவம் இருக்கப் போகிறது?
சே குவேராவின் பிம்பம் என்பது இன்று அதிகமாகக் குறியீடாக ஆகிவருகிறது. சமவேளையில் அவரது உருவம் சந்தையின் குறியீடு, புரட்சியின் குறியீடு. அவர் மதுப்புட்டியிலும் இருக்கிறார். சுருட்டிலும் இருக்கிறார். நீச்சல் உடையிலும் அவரது படம் பொறிக்கப்படுகிறது. ஓஷோ, சத்திய சாய்பாபா, நித்யானந்தா என ‘ஆன்மீகக் குருக்களை’ வழிபடுபவர்கள் கூட சே குவேராவின் நட்சத்திரத் தொப்பியின் அழகைப் பற்றிப் பேசமுடியும்.
அலீடா மார்ச்சாவும் சே குவேராவின் ஒரு குறியீடுதான்.
பிடல் காஸ்ட்ரோ ஒரு நாட்டின் தலைவர். சே குவேரா நாட்டு எல்லைகள் கடந்த புரட்சியாளன். ஆகவேதான் பொலிவியா செல்லும் முன் அவன் கியூபக்குடியுரிமையை விட்டுச் செல்கிறான். மூலதனத்தை வட்டிக்குவிடும் சோவியத் யூனியனை சே குவேரா விமர்சித்தார். சோவியத் நாட்டுடனான பிடலின் விமர்சனமற்ற உறவு சே குவேராவுக்கு உகந்ததாக இருக்கவில்லை. பிடலின் ஆலோசனைகளையும் மீறித்தான் சே குவேரா பொலிவியா சொல்ல முடிவெடுத்தான்.
சர்வதேசியப் புரட்சியாளனான சே குவேராவின் மரபை ஒரு அரசு எனும் அளவில் இன்றைய கியூபா கடைப்பிடிக்கும் எனக் கருதவேண்டிய அவசியமில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அல்லது பிரித்தானியப் பிரதமர் கேமரூன் போன்றவர்கள் கியூபாவுக்கு விஜயம் செய்து, அவர்கள் சே குவேரா நினைவகத்துக்குச் சென்றுவிட்டு, அலீடா மார்ச்சாவையும் கமில்லோவையும் சந்திப்பார்களானால் அப்போதும் அலீடா சே குவேராவின் இருநூல்களை அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கத்தான் செய்வார். வியட்நாம் அமெரிக்காவின் பொருளாதாரக் கூட்டாளியாகவும் உலக பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தில் பங்காளியாகவும் ஆகும்போது இது நடந்துவிடுவதில் என்ன ஆச்சர்யம்?
இலங்கையின் சே குவேரா இயக்கம் பிஜேபி. இலங்கைத் தூதர் தாயன் ஜயதிலக பிடல் காஸ்ட்ரோ குறித்து நூல் எழுதியிருக்கிறார். இப்போது அலீடா மகிந்த ராஜபக்சேவிடம் சே குவேராவின் இரு நூல்களைக் கையளித்திருக்கிறார். எண்பதுகளில் சே குவேரா குறித்து அனைத்து ஈழவிடுதலை இயக்கத்தவர்களும் வெளியிட்ட நூற்களும் கட்டுரைகளும் ஞாபகம் வந்துபோகிறது.
கால் நூற்றாண்டு காலத்தில் உலகம் தலைகீழாகிவிட்டது. பிம்பங்களினதும் குறியீடுகளினதும் உலகாக ஆகிவிட்டது. தூரத்தில் நிலைகுத்திய சே குவேராவின் விழிகளில் தெறிக்கும் விடுதலை வேட்கையும், தனது சொந்தப் பார்வைகளைத் தனது சொந்த விருப்பில் தேர்ந்துகொள்ளும் அவரது அடிமனப பிரக்ஞையும் ஒரு போதும் மாறுவதில்லை.
சே குவேராவையும் நாம் விடுதலை செய்யத்தான் வேண்டியிருக்கிறது. இதுவே நாம் இன்று புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் யதார்த்தம்.















பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரா? சுதந்திரப்
முள்ளிவாய்க்கால்:புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு
சில்லறை வணிகத்தில் வால் மார்ட் [walmart ] மலிவு
கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும்
ஈழ அகதிகளுக்குத் தமிழகத்தில் சிறப்பு முகாம்
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் காணொளி
நாடுகடந்த தமிழீழ அரசு :தமிழீழ சுதந்திர சாசனம்
































