Published On: Sat, Jul 28th, 2012

தேசியத் தலைவர் பிரபாகரனின் நகர்வுகளுக்கு அமைவாகவே சிங்களத் தலைவர்களால் ஆட்சியை நகர்த்த முடியும்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே கடந்த முப்பது வருடங்களாக இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்த ஒரேயொரு சக்தியாக விளங்குகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக பிரபாகரன் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து, இலங்கையின் அரசியல் பெரும் மாற்றம் கண்டது. இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நகர்வுகளுக்கு ஏற்பவே தமது ஆட்சி முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிறீலங்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழீழ விடுதலைப் புலிகளை ஏளனம் செய்தார். ஏதோ பத்து பதினைந்து வரையான புலிப் பயல்கள் மாத்திரமே இருக்கிறார்கள். சில மணிநேரத்தினுள் அவர்களை அடக்கிவிடலாம் என்று கூறினார். இதனைவிட பிரேமதாசா புலிகளை அழிக்க பல முயற்சிகள் செய்தார். அவர் கொல்லப்பட்ட பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். இவரின் காலத்தில் புலிகள் பல இராணுவ வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதற்கு அடுத்ததாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இவரின் காலத்திலும் புலிகள் யுத்த களத்தில் அபரிமிதமான சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர். குறிப்பாக யுத்த களங்கள் அனைத்தும் புலிகளுக்குச் சாதகமாகவே அமைந்திருந்தன.

இவர்களுக்கு அடுத்ததாக ஜனாதிபதியாக வந்தவர்தான் இன்றைய மகிந்த ராஜபக்ச. இவர் ஒரு பிணந்தின்னியாகவும் தமிழினத்தின் இரத்தம் குடிக்கும் காடேறியாகவும் தன்னை உருமாற்றிக்கொண்டார். தமிழீழ தேசியத் தலைவரின் விட்டுக்கொடுப்பு காரணமாகவே இந்தக் காடேறி ஜனாதிபதியாக மாறியது. மகிந்த ராஜபக்சவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே ஜனாதிபதிக்கான கடும் போட்டி நிலவிய போது, ‘மகிந்த ஒரு ஜதார்த்தவாதியாகத் திகழ்கின்றார். இவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவார் என்று கருதுவதாலேயே சிறீலங்காவின் ஜனாதிபதியாவதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறோம்’ என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படையாகவே பாராட்டினார்.

அவர் ஜனாதிபதியாவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தார். ஆனால் இந்தக் காடேறி இன்று உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ததைப் போல தனக்கு ஜனாதிபதிப் பதவியை வழங்கிய தமிழினத்தையே அழித்தொழித்திருக்கிறது. என்னதான் இருந்தாலும் சிறீலங்கா குடியரசாகிய பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பின் பிரகாரம் பதவியேற்ற முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் இன்றைய மகிந்த ராஜபக்ச வரை அனைத்து ஆட்சியாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத் தலைவருமான பிரபாகரன் அவர்களுடைய நகர்வுகளுக்கு அமைவாகவே தங்கள் ஆட்சி முறைகளை மாற்றியமைத்தனர்.

குறிப்பாகச் சொல்லப்போனால் மேற்படி ஜனாதிபதிகள் அனைவரும் குறிக்கப்பட்ட சில வருடங்கள் மட்டுமே சிறீலங்காவின் ஜனாதிபதிகளாக பதவி வகித்தனர். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முப்பது வருடங்களாக தமிழீழத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறீலங்காவிற்கே ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். இன்றுவரை சிறிலங்காவின் ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக எமது தேசியத் தலைவரே விளங்குகின்றார். ஆனால், இந்த நிலைகளிலிருந்து விடுதலை பெற்று தமிழ் மக்களின் தலையீடுகள் இல்லாத சிறீலங்காவை உருவாக்க வேண்டுமென்பதே மகிந்த ராஜபக்சவின் இன்றைய கனவாக உள்ளது.

இதற்காகவே தமிழ் மக்களை வேரோடு அழிக்கின்ற செயற்பாடுகளில் மகிந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக முன்னெடுத்த ஆயுத ரீதியான போராட்டத்தை சர்வதேச நாடுகளின் உதவியுடன் அழித்தொழித்த அரசாங்கம், தற்போது ஜனநாயக வழியிலான போராட்டங்களையும் அடியோடு நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் மக்கள் எந்த வகையிலும் துளிர்விடக் கூடாது. அவ்வாறு துளிர்விடும் பட்சத்தில் அவர்களை ஈவிரக்கமற்ற முறையில் அழித்தொழிக்கலாம் என்ற வரலாற்றுப் பாடத்திட்டத்தையே அரசு பின்பற்ற முயல்கிறது. இதற்காகவே மக்கள் தற்போது முன்னெடுத்து வருகின்ற அனைத்துச் செயற்பாடுகளையும் மறைமுகமாக நசுக்கும் செயற்பாட்டில் படைத்தரப்பும் அரசாங்கமும் ஈடுபட்டுள்ளன. தமிழ் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் கருத்துக்களை சட்டத்தின் பிடியைக் கொண்டு நசுக்கும் செயற்பாட்டில் தொடங்கி தற்போது புலிப் பூச்சாண்டிகாட்டி மக்களின் போராட்டங்களை நசுக்கும் செயற்பாடுகளையும் மகிந்த அரசு முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஜனநாயகப் போராட்டங்களின் போது அரசாங்கமும் படையினரும் நடந்துகொண்ட முறையிலிருந்து தமிழ் மக்களின் விடயத்தில் அரசு எத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பது தெளிவாகிறது.

வடக்கு கிழக்கில் மிக வேகமாக இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புகளுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் இரண்டு போராட்டங்களை நடத்த முற்பட்டது. இதில் முதலாவது போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் நீதி என்ற பெயரில் துரோகத்தனம் செய்கின்ற சிறீலங்கா காவல்துறையினதும் நீதிபதிகள் சட்டத்தரணிகளினதும் துணையுடன் அந்தப் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆயினும் சளைக்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நெல்லியடியில் பிறிதொரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்தப் போராட்டத்தின் போது தமிழீழ தேசியக் கொடியாகிய புலிக்கொடி காட்டப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வர் புலிக்கொடிகளை அசைத்தவண்ணம் அங்கு சுற்றித் திரிந்தனர். மூன்று வருடங்களாக தேசியக் கொடியைப் பார்க்க முடியாமல் தவித்த மக்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்களே புலிக்கொடிகளைக் கொண்டுவந்து காண்பித்திருக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்து கொடிகள் அசைக்கப்பட்டமையால் பட்டொளி வீசிப் பறந்த புலிக்கொடிகளைப் பார்த்த மக்கள் உள்ளூரப் பெரு மகிழ்ச்சியடைந்தனர். நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான குறித்த ஆ£ப்பாட்டத்தின் பின்னணியில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளே உள்ளனர் என்பதைக் காட்டுவதற்கும் இதன் மூலம் சர்வதேச ரீதியாகவும் தென்னிலங்கையிலும் அரசியல் இலாபங்களைச் சம்பாதிப்பதற்கே சிறீலங்கா அரசாங்கம் முயன்று வருகின்றது.

ஆனால் குறித்த போராட்டத்தில் புலிக்கொடிகளுடன் சுற்றியவர்களை சிறீலங்கா காவல்துறையினர் ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளமையால் காவல்துறை சிக்கலில் மாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டார். நெல்லியடியில் புலிக்கொடி காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக  அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, அவர் வழங்கிய பதில் நகைப்புக்கிடமானதாக உள்ளது. அதாவது நெல்லியடியில் காட்டப்பட்டது தேசியக் கொடி என்பது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தெரியாதாம்.

தெரிந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்களாம். தென்னிந்தியச் சினிமா திரைப்படங்களில் வருகின்ற வடிவேலுவின் நகைச்சுவை போல குறித்த பொலிஸ்மா அதிபரின் கருத்தையும் கேட்ட மக்கள் சிரிப்பத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? சர்வதேச நாடுகளையும் தமிழ் மக்களையும் ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரர்கள் என்றே மகிந்த அரசாங்கமும் இராணுவமும் ஆட்சியாளர்களும் கருதுகின்றனர்.

புலிக்கொடியைப் பொலிசாருக்குத் தெரியாதென்று கூறியதன் மூலம் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை அரசு வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், இந்தப் பைத்தியக்காரச் சிந்தனை எப்பொழுதும் எடுபடுமென்றில்லை. ‘பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக் கோடுகள் உள்ளன’ என்று கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் கூறியிருந்தார்.

அதை இங்கே மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தரமான, நிம்மதியான, சுபீட்சமான, அரசியல் தீர்வை வழங்குவதற்கு சிங்கள தேசம் தொடர்ந்தும் பின்னடிப்பார்களாயின், தலைவர் கூறியதைப் போல தமிழ் மக்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலையொன்று ஏற்படும். இதனால் ஏற்படுகின்ற அனைத்துப் பாதிப்புகளுக்கும் சிறீலங்கா அரசாங்கமே பதில் சொல்ல வேண்டியும் ஏற்படும்.

வீரமணி

நன்றி :ஈழமுரசு

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

பிரபல்யங்கள்

website security