Published On: Thu, Feb 27th, 2014

‘அண்ணை றைற்’ புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் காலமானார்

ஈழத்தின் புகழ் பெற்ற நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், கே.எஸ்.பாலச்சந்திரன் 26-02-2014 அன்று கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார்.

k.s.balachandran1944ம் ஆண்டு கரவெட்டியில் பிறந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற இவர் இலங்கையில் உள்நாட்டு இறைவரித்திணைகளத்தில் பணி புரிந்து பின்னர் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

ஏறக்குறைய 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய ‘அண்ணை றைற்’ இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.

இலங்கையில் தயாரான வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் தயாரான உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.

இவர் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ என்ற புதின நூலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது. அவர் எழுதிய ‘நேற்றுப் போல இருக்கிறது’ என்ற கட்டுரைத் தொகுப்பு இலங்கை சாகித்ய விருதுக்காக சிறந்த நூலாக நானாவித பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டது. ‘நேற்றுப் போல இருக்கிறது’ என்ற கட்டுரைத் தொகுப்பு 2011ல் இலங்கை இலக்கியப் பேரவை – யாழ் இலக்கியவட்டம் வழங்கிய சிறந்த நூலுக்கான (நானாவிதப்பிரிவு) விருதையும் பெற்றது.

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

website security