எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

prabakaran birthday wishes 2015எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக

ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக!

“இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி

இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!

வெல்வதற்கே வந்த வேங்கை வீரரவர் வெல்வார்!

வினைமுடிக்கும் பேராற்றல் வள்ளுவத்தாற் பெற்றார்!

ஒல்லும்வாய் அவரறிவார் ஓர்நாளில் ஈழம்

உருவாக்கி ஒண்டமிழால் அரசாண்டு வாழ்வார்!

 

துன்புற்றுத் துடிதுடித்துத் தொல்லையுறும் தமிழர்

துயர்துடைக்க விலங்கொடிக்கத் துடித்தெழுந்து புலிகள்

வன்படையைக் கட்டமைத்தே வாகைசூடி வாழ்வார்!

மண்ணோடு கடலோடு வான்முழுதும் வெல்வார்!

இன்னலையே இன்பமென ஏற்றபுலித் தலைவன்

எல்லாளன் வாழ்நாளில் ஈழமிங்கு விளையும்!

இன்புறவே தமிழரினி இறையாண்மை பெறுவார்

ஈகஞ்செய் மாவீரர் இசைபோற்றி வருவார்!

 

முல்லைப்போர் முடிவல்ல மூடர்காள்! புலிகள்

முன்காலை எடுத்துவைத்து முன்னேறும் பொழுதில்

நில்லாது சிங்களர்நீர் நீள்முதுகு காட்டி

நிலைகுலைந்து நெடுமரமாய் வீழ்பொழுதில் சொல்வீர்!

“எல்லாளன் போலில்லை மாவீரர்” என்றே!

இறுதிப்போர் தமிழீழ வெற்றிப்போ ரென்றே!

சொல்லுமுல கெல்லாமும் சூழ்ந்ததற மென்றே!

தொல்லைதீர புலிமுடியை சூடுவது மன்றே!

 

அல்லவைதேய்ந் தறம்பெருகும்! அருள்மறையே சொல்லும்!

அமிழ்தனைய தமிழ்ப்பெண்டிர் அழகுமுழு தழிந்து

அல்லற்பட் டாற்றாது அழுதகண்ணீர் நெருப்பாய்

அருந்தமிழ்க்கு எதிர்நின்ற அறக்கொடிய ரழிக்கும்!

நல்லறத்தை நிலைநாட்ட ஞாலமுதற் றமிழே

நல்லரசன் எல்லாளன் நாற்படையை யெழுப்பி

வெல்லும்வாய் காட்டிபுலி வெற்றிபெற வைக்கும்

விறல்வே ந்தன் தமிழீழம் வெல்கயென சொல்லும்!

 

எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் கேட்பீர்!

எடுத்தவினை முடிக்காமல் இறந்துபட மாடடார்!

எல்லாளன் எழுங்காலம் ஈழமெழும் காலம்!

எதிரிகளின் எக்காள இசைமுடியுங் காலம்!

எல்லாளப் பெருங்சோழன் எழுகதிரா யெழுவான்

இனங்காக்க எதிரியினை ஈங்கவனே  அழிப்பான்!

எல்லாளன் புலிக்கொடியே ஈழமெங்கும் பறக்கும்!

இன்னலறு இனியதமிழ் ஈழமினிப்  பிறக்கும்!

 

எல்லாள ஈடில்லா   யெம்மிறையே வாழ்க!

என்றென்றும் தமிழன்னை ஏற்றமுற வாழ்க!

கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே தோன்றி

கழகத்தால் வளர்தமிழைக் கைக்கொண்டோன் வாழ்க!

நல்லாண்மைத் திறத்தாலே நாடாண்டு வாழ்க!

நல்லாட்சி நன்றாற்ற நலமோடு வாழ்க!

பல்லாண்டு வாழ்க!தமிழ்ப் பண்போங்க என்றும்

படையோடு வலிவோடு பார்போற்ற வாழ்க!

 

திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

அகரமுதல இணையம்

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !