Published On: Sun, Mar 19th, 2017

கால அவகாசம் கிடைப்பதை அடுத்து அரசு கதைப்பதை பார்த்தீர்களா?

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு நாட்டில் இன, மத, மொழி பேதங்களைக் களைகின்ற நோக்கம் எதுவும் அவசியமில்லை.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டாலும் நல்லாட்சியும் முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே நடந்து கொள்கின்றதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகளை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லை என்பதே உண்மை.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் பேரினவாதிகள் ஆத்திரமடைவர்.காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டால் படையினர் பலர் கம்பி எண்ண வேண்டி வரும்.தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தினால் இராணுவ ஆக்கிரமிப்பை வாபஸ் பெற வேண்டும்.ஆகையால் இவை எதனையும் செய்யாமல் காலம் கடத்துவதே ஒரே வழி என்று நல்லாட்சி கருதுகிறது.

இதற்குக் காரணம் என்ன? தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் பேரினவாதிகள் தமக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர்.எனவே கிடைத்த ஆட்சிப் பதவியை உரிய காலம் வரைக் கொண்டு செல்வதே ஒரே வழி என்று நல்லாட்சி கருதுகிறது.

தன்னில் எந்தக் குறை குற்றமும் இல்லாமல் இருப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்து அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்து நல்லாட்சி நரியாட்சியாக நகர்ந்து போகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்கின்ற இலங்கை அரசு, கால அவகாசம் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொண்டு, தடிப்புக் கதை கதைக்க ஆயத்தமாகி விட்டது.

சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை, கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு நாம் சம்மதிக்கவில்லை, ஐ.நா சபைக்கு எந்த வாக்குறுதிகளையும் நாம் வழங்கவில்லை என்பது போன்ற தடிப்புக் கதைகளை இலங்கை அமைச்சர்கள் கூறத் தலைப்பட்டுள்ளனர்.

உண்மையில் இலங்கையில் தமிழ் சிங்கள விரோதம் நீண்டு செல்வதற்கு அடிப்படைக் காரணம் சிங்கள ஆட்சியாளர்களினதும் பேரினவாதிகளினதும் வாய்ப் பேச்சுக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழினத்துக்கு எதிராக சிங்கள அமைச்சர்களும் பேரினவாதிகளும் கண்ட பாட்டில் கதைத்தனர். இவற்றால் இனப் பகைமை இந்த நாட்டில் வேகமாகப் பரவியது.

இதன் விளைவுதான் தமிழ் – சிங்கள மக்களின் உறவு என்பது இன்றுவரை கட்டியெழுப்ப முடியாத விடயமாக இருக்கிறது.

இப்போதுகூட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பெற்றுக் கொண்ட நல்லாட்சி, தற்போது கதைப்பதைப் பார்த்தால், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் தேவையாக உள்ளது.

இக்கால அவகாசத்தை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்மதித்துள்ளது.

இது உண்மையில் பாராட்டப்பட வேண்டும்.தமிழ் மக்களின் பெருந்தன்மையை இது காட்டுகிறது.

எனவே நாங்கள் இதய சுத்தியோடு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூற வேண்டிய நல்லாட்சி,அதையயல்லாம் விடுத்து தமிழர்களுக்கு – எதிராக ஆத்திரமூட்டக்கூடிய கதைகளைக் கதைக்கிறது எனில் இதை நல்லாட்சி என்று எப்படிக்கூற முடியும்?

-வலம்புரி-

சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கியது தவறு – வடக்கு முதலமைச்சர்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுவரை வழங்கிய கால அவகாசத்தினால் மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றார்கள் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன்கூடிய கால அவகாசம் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

என்னைப்பொறுத்தவரை கால அவகாசம் கொடுப்பது பிழையானது. ஏன்னென்றால் இதுவரை காலமும் செய்யப்பட்டதில்மக்களுக்கு என்னவிதமான நன்மையை கொடுத்தது என்று நாங்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் என்று ஒன்று இருக்கிறது. அந்த அலுவலகம் இந்தா வருகிறது எல்லாம் நடைபெறுகிறது என்று கூறினார்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

கடைசியாக அது கடதாசியில்தான் இருக்கிறதே தவிர மக்களுக்கு அது போய்சேரவில்லை. இதுவரை காலமும் மக்களுக்கு போய் சேர்ந்த விடயங்கள் என்னென்ன?

என்னென்ன நன்மைகளை அரசாங்கம் செய்திருக்கிறது என்பதை முதலில் சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும், ஆராய வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் ஏதோவொரு அரசியல் காரணங்களுக்காக இன்றும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுவது சரியாக எனக்குப்படவில்லை. இது என்னுடைய கருத்து.

தலைமைத்துவம் வேறுவிதமான கருத்தை வைத்திருந்தாலும் அதாவது அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால் அவ்வாறு கால அவகாசம் கொடுக்கும் காலத்தில் கண்காணிப்பு நடக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்.

அதுவும் ஒரு முறை. ஆனாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றாலும் அதை தலைமைத்துவம் கூறி வைத்திருக்கிறது.

எங்களை பொறுத்தவரை இதுவரை காலமும் நடைப்பெற்றதில் மக்களுக்கு என்னவிதமான நன்மையை கொடுத்திருக்கிறது என்றுதான் அதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !