காலை வாரும் ஐநா தீர்மான வரைவு!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் 23ம் திகjp வியாழக்கிழமை நிறைவேற்றப்படவுள்ள இலங்கையின் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தீர்மானத்தின் மூலவரைவு பேரவையில் கடந்த 13ம் திகதி சம்ர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

காலத்தை இழுத்தடிக்கும் நோக்கில் செயற்படும் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தத் தீர்மானம் மேலதிக கால அவகாசத்தை வழங்குவதால் தமிழ் மக்கள் மத்தியில் இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் புதிய தீர்மான வரைவு தொடர்பாக அவர்கள் சில குறைந்த பட்ச எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்தனர் என்பதை மறுக்க முடியாது.

அரசாங்கத்துக்கு கடிவாளம் போடும் வகையிலான பொறிமுறைகள் குறித்த சில எதிர்பார்ப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த போதும் அத்தகைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியதாக இம்முறை தீர்மான வரைவு அமையவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை கவனத்தில் கொண்டு இந்த வரைவில் சர்வதேச சமூகம் திருத்தம் செய்வதற்கு வாய்ப்பான சூழல் இருக்கிறது.

இப்போது பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரு வரைவு தான் இது. தீர்மானமாக இன்னமும் நிறைவேறவில்லை.

வரும் 21ம் திகதிக்குள் பேரவைச் செயலகத்தில் உள்ள வரைவில் திருத்தங்களைச் செய்யலாம். அதற்குப் பின்னர் இந்தத் தீர்மான வரைவு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது மார்ச் 23ம் திகதி நேரடியாகவே திருத்தங்களையும் முன்வைக்கலாம்.

ஆனால் அத்தகைய திருத்தங்களுக்கான வாய்ப்புகளின்றி பெரும்பாலும் இந்த வரைவு அப்படியே நிறைவேற்றப்படும் சாத்தியங்களே தென்படுகின்றன.

ஏனென்றால் இது இலங்கை அரசாங்கமும் இணைந்து சமர்ப்பிக்கின்ற தீர்மானம். அதனால் இலங்கை அரசின் ஒப்புதல் முக்கியமானது.

இந்தத் தீர்மானத்தின் முதல்நிலை வரைவு கொழும்புக்கு அனுப்பப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்ட பின்னரே இறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் ஆகியோர் அரசதரப்புடன் மாத்திரமன்றி இந்தியத் தூதுவர் தரன் ஜித் சிங் சந்துடனும் கலந்துரையாடியே இந்த வரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த வரைவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு இணை அனுசரணை வழங்குவதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

இதற்கு முந்திய தீர்மான வரைவுகளில் தயாரிப்பு கொழும்பை மையப்படுத்தி நடக்கவில்லை. ஜெனிவாவில் தான் அதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

இம்முறை தீர்மான வரைவு கொழும்புக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே வெளியே கசியவிடப்பட்டது.

காரணம் இந்தத் தீர்மானத்துடன் இலங்கை அரசாங்கம் முழுமையாக இணங்கி செயற்பட வேண்டும். 2015 தீர்மானத்தை அப்படியே முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மேற்குலகம் எதிர்பார்க்கிறது.

இந்தத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை இணங்க வைப்பதற்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஏனென்றால் இதற்கு அப்பால் இந்த விவகாரம் செல்வதை மேற்குலகம் விரும்பவில்லை. இலங்கை அரசாங்கமே 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி விட்டால் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஐநாவுக்கு ஏற்படாது.

தற்போதைய சூழலில் இலங்கையில் அரசியல் உறுதிப்பாடும் ஜனநாயக சூழலும் மேற்குலகுக்கு முக்கிய தேவையாக இருக்கின்றன. அமெரிக்கா இதனை வெளிப்படையாகவே கூறி வருகிறது.

அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இலங்கையில் ஜனநாயகமும் உறுதிப்பாடும் நிலைத்திருப்பது அவசியம் என்று அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்க பாராளுமன்றக் குழுத் தலைவர் பீற்றர் ரொஸ்கம் கூறியிருக்கிறார்.

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால் அது உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போதைய அரசுக்கு எதிரான சக்திகள் பலமடையும். அதனால் இந்த அரசாங்கம் உறுதிநிலை குலைந்து போகும்.

அத்தகைய சூழலில் இலங்கை அரசியலில் உறுதியற்ற நிலை உருவாகும். ஜனநாயக சூழலும் கேள்விக்குள்ளாகும். அதன் தாக்கம் இந்தப் பிராந்தியத்தின் மீது பாதுகாப்பு நலன்களைக் கொண்டிருக்கின்ற நாடுகளிலும் எதிரொலிக்கும்.

எனவே தான் இலங்கையின் உள்நாட்டு அரசியல் உறுதிப்பாட்டை குலைக்காத வகையிலும் செயற்படுவதற்கு மேற்குலகம் விரும்புகிறது.

இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது தீர்மான வரைவில் திருத்தங்களைச் செய்வதற்கு வாயப்புகள் இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மேற்குலக சமூகம் எத்தனிக்காது என்பது உறுதி.

தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஓர் ஐநா பணியகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

2015ம் ஆண்டு தொடக்கம் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இது பற்றி பேச்சு எடுக்கப்பட்ட போதே அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது.

கடும் நிபந்தனைகள் மற்றும் ஐநாவின் கண்காணிப்புடன் ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறத்தியிருக்கிறது.

இதன் அர்த்தம் ஐநாவின் கண்காணிப்பு பொறிமுறை ஒன்று செயற்பட வேண்டும் என்பது தான். வடக்கு கிழக்கில் இந்தப் பணியகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இதனை நிராகரித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை (மார்ச் 15) நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பெரேரா கலப்பு விசாரணைக்கோ இலங்கையின் ஐநாவின் கண்காணிப்பு பணியகத்தை அமைப்பதற்கோ அரசாங்கம் இணங்காது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்த இரண்டு விடயங்கள் பற்றியுமே இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் வெளிப்படையாக பேசப்படாத விடயங்களாகும். ஆனால் இன்னமும் விவாதிக்கப்படாத விடயங்கள்.

2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் கலப்பு விசாரணைக்கான பரிந்துரை ஒன்றே முன்வைக்கப்பட்டிருந்தது.

இப்போது 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் போது அதனையும் அமுல்படுத்த வேண்டும் என்றே அர்த்தம்.

அதேவேளை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் உதவிகளை வழங்குவதற்குமான பணியகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட ஒன்று அல்ல. ஐநா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையிலும் கூட இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே தான் இந்தக் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. ஜெனிவா தீர்மானம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் எல்லா நகர்வுகளிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் அங்கு எடுக்கப்படும் முடிவுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தயார் இல்லை என்பதையும் அரசாங்கம் உள்நாட்டில் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போது அங்கேயே அதனை நிராகரித்து விட்டு நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு வந்தது.

ஆனால் இப்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துகிறோம் என்று தலையாட்டி விட்டு வருகிறது. ஆனால் எதையுமே செய்வதில்லை.

ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில்லை என்ற பொது நிலைப்பாட்டில் இரண்டு அரசாங்கங்களும் இதுவரையில் வேறுபட்ட அணுகுமுறைகளைக் காண்பிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

கடுமையான நிபந்தனைகள் மற்றும் ஐநாவின் கண்காணிப்புடன் ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எந்தப் பலனும் கிடைக்கும் போலத் தெரியவில்லை.

முடிந்த வரைக்கும் இலங்கை அரசாங்கத்தை இணங்க வைப்பது என்ற விடயத்தில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அக்கறை செலுத்துவதால் இலங்கை அரசாங்கத்தினால் இலகுவாகத் தப்பிக்க முடியாது.

30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையை இணங்க வைப்பது மாத்திரம் தான் கடமை என்று சர்வதேச சமூகத்தினால் ஓடி ஒழிய முடியாது. அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறிமுறையும் முக்கியம்.

நிரந்தர ஐநா பணியகம் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டால் தீர்மானத்தின் கணிசமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அத்தகைய பணியகம் ஒன்றை அமைப்பதற்கான அழுத்தங்களை ஐநா கொடுப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனிவாவில் இப்போது கொடுக்கப்படுகின்ற கால அவகாசம் என்பது மிகவும் சிக்கலானது. 30/1தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வாயப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாமல் போனால் அது பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கு ஒட்டுமொத்த ஐநா பொறிமுறைகள் மீதும் அவநம்பிக்கை ஏற்படும். சர்வதேசம் நீதியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அது நொறுக்கி விடும்.

எனவே இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதில் மேற்குலக நாடுகள் இன்னும் காத்திரமான பங்களிப்பை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமது நலன்களை மட்டும் கணிப்புக்குட்படுத்தாமல் பரந்துபட்ட அளவில் இந்த விவகாரத்தை மேற்குலகம் கையாளத் தவறினால் இலங்கையில் நல்லிணக்கம் என்பது நிச்சயம் கேள்விக்குறியாகவே மாறும்.

இலங்கையின் உறுதித்தன்மையை எதிர்பார்க்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இது நல்லதொரு சகுனமாக இருக்காது.

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !