கூட்டமைப்பு :அரசாங்கத்துக்கும் ,சர்வதேசத்துக்கும் பச்சைக் கொடி !

கடந்த மாதம் நடந்து முடிவுற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்ற இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானம் வாக்கெடுப்பின்றி முழுமையாக நிறைவேறி உள்ளது.இரண்டு வருட கால அவகாசத்துக்கு பேரவை கூடுமுன்பே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வ தேச சமூகத்துக்கும் தமது பச்சைக் கொடியை காட்டி விட்டது.

ஐ. நாவின் முகமும் தமிழ் மக்களின் மீட்சியும்

இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைப் பேரவையில் 30/1 இல் ‘போரின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள், துஸ்பிரயோகங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கையுடன் இணைந்து சர்வதேச நீதிபதிகள், பிரதிவாத தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும்’ எனும் பிரேரணை இலங்கையின் அனுசரணையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இவ்வாண்டு, கடந்த மாதம் நடந்து முடிவுற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்ற இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானம் வாக்கெடுப்பின்றி முழுமையாக நிறைவேறி உள்ளது.

இரண்டு வருட கால அவகாசத்துக்கு பேரவை கூடுமுன்பே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வ தேச சமூகத்துக்கும் தமது பச்சைக் கொடியை காட்டி விட்டது.

சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதற்கு ஆயத்தமாகவே, மனித உரிமைப் பேரவையில் காலடி வைத்தன.

இத்தகைய பின்புலத்தில் இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கிடைக்கும் எனும் மிகுந்த நம்பிக்கையோடு பேரவையில் பங்கு பற்றி வெற்றியோடு திரும்பி உள்ளது. வெற்றி யாருக்கு? ஒடுக்கப்பட்ட மக்களுக்கா? ஒடுக்குபவர்களுக்கா?

ஐ. நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் முத்தரப்பும் தத்தமது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெற்றியை சுவிகரித்துக் கொண்டனர். இதுவே உண்மை.

மனித உரிமைப் பேரவை கூடுகின்ற கால கட்டத்திலேயே, ‘நல்லாட்சி காவலன் முகமூடி’ அணிந்த தற்போதைய ஜனாதிபதி “எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிபதிகளை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள்ளாகவே சூட்டோடு பதிலளித்து விட்டேன்” எனப் பகிரங்க கூட்டமொன்றில் அறிவித்து விட்டார்.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க “காணாமல் போனோரின் உறவுகள், தமது உறவுகளை மீட்டுத் தருமாறே கேட்கின்றனர். தமது உறவுகள் காணாமல் போனதற்குக் காரணமாயிருந்த இராணுவம் மற்றும் பொலிசாரைத் தண்டிக்குமாறு கோரவில்லை. எனவே, இந்த அரசாங்கம் இராணுவத்தைப் பாதுகாக்கும்” எனக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத் தருமாறும் நீதியை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்து, உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்ற மண்ணில் நின்றுக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி “இராணுவத்தை பாதுகாப்பேன்” எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்.

நீதி என்பது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது மட்டுமல்ல, அதற்குக் காரணமாக இருந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதுமாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “கடந்த காலத்தில், ஐ. நாவுக்கு நமது நாட்டு நீதி மன்றங்களில் நம்பிக்கை இருக்கவில்லை. அதனாலேயே வெளிநாட்டு நீதிபதிகள் தலையிடும் பொறிமுறை தொடர்பில் கூறினர்.

நல்லாட்சியில் சுயாதீனம் பேணப்படுகின்றது. ஆதலால் வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. அதற்கு அரசியல் யாப்பிலும் இடமில்லை” எனக் கூறி வருகின்றார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, “நல்லிணக்கமும் யுத்தக் குற்றமும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை. இரண்டும் சந்திக்க முடியாது; சந்தித்தால் விபத்து. ஆதலால் யுத்தக் குற்றம் தொடர்பில் கதைத்தால் மீண்டும் யுத்தம் வரும்” என மிரட்டும் பாணியில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவோ, “யுத்தக் குற்றம் தொடர்பாகக் கதைத்தால், தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தண்டிக்கப்படுவார்கள்” என்கின்றார். அரசியல் யாப்புக்கு உட்பட்ட முப்படைகளுக்கு மட்டுமே உரித்தான ஒழுக்கக் கோவைகளை தமதாக்கி இராணுவத்தைப் பயன்படுத்தி, நீண்ட காலமாகத் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட வன்முறைசார்ந்த செயற்பாடுகளையும் தற்காப்பு நிலையெடுத்த பொது மக்களையும் சமமாக்குவது இந்த நிலைபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

முன்னாள், இன்னாள் தலைவர்கள் தம்முடைய இனவாத, கட்சிசார் நிலையிலிருந்து தமிழ் மக்களுக்கு எத்தகைய நீதியும் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். தாம்சார் இனத்தினதும் மதத்தினதும் காவல்கள் என்ற நிலையில் இருந்து மனித நீதிக்கு அப்பாற்பட்டுச் செயற்பட்டனர் எனக் குற்றம்சாட்டப்படும் படையினரைப் பாதுகாக்கத் தயங்காது முன்னிற்கின்றனர்.

இனவாதமும், மதவாதமும் முதலாளித்துவத்தோடு இணைந்து ஆட்சி செலுத்துகின்ற நாட்டில், சமாளிக்கும் தன்மையிலான அரசியலைக் கூட்டமைப்பு செய்வது ஒன்றும் புதுமையல்ல; புதியதுமல்ல. ஆதலால் தான் தாம்சார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முகமும், தெற்குக்கு இன்னொரு முகமும், சர்வதேசத்துக்கு ஆட்சியாளர்களோடு சேர்ந்து கூட்டு முகத்தையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.

கால அவகாசம் தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் மூலம், தாம் எதிர்கட்சியல்ல; எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அரசாங்கத்தின் தோழமைக் கட்சி என்பதையே சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்கக் கண்ணும் கருத்துமாக செயற்படும் நாடுகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னுதாரண நிலைபாடே போதுமானதாகும்.

தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்கும் காவலர்களாக உள்ள வெளியக சக்திகள் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் சந்திப்பதற்கான தற்றுணிவை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

அத்தோடு 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலின் போதும் தம்முடைய ஆறுதல் கிடைக்குமென அரசாங்கத்துக்கு சமிக்ஞை காட்டியிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவதை வெளிநாட்டு சக்திகள் விரும்பவில்லை. மஹிந்தவுக்கு கால அவகாசத்தின் இறுதி நிலை, சுருக்கு கயிராக அமையலாம். மைத்திரி அணியினருக்கு கரைசேரும் கயிராக அமையலாம்.

ஓடுக்கப்படும் தமிழ் மக்கள், முதலாளித்துவ பிரபுத்துவ கட்சி அரசியல்வாதிகளிடம் தமது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை எதிர்பார்த்து பயணிப்பது என்பது இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கே இட்டுச் செல்வதாக அமையும்.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு அரசாங்கத்துக்கு கொடுத்திருக்கின்ற கால அவகாசத்தை, மக்கள் சக்தியின் மூலம் கட்டியெழுப்பப்படுகின்ற சிவில் சமூக அமைப்பு தமதாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்கும் கண்காணிப்பு குழுக்களை அமைத்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை அறிக்கைகள் பெற்றுக் கொள்வதோடு அதன் தொகுப்பறிக்கை ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கும், உள்ளக வெளியக ஆதரவு சக்திகளுக்கும் ஐ. நா மனித உரிமை பேரவைக்கும் கிடைக்க வழி செய்தல் வேண்டும்.

அத்தோடு தொடர்ச்சியாக வரவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை சிவில் அமைப்புகளாலான மக்கள் சக்தி உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளின் மேடைகளுக்கு முன்னால் நின்று கரகோஷம் செய்வது என்பது, ‘யானை தன் தும்பிக்கையால் தன் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்வதற்கு சமமாகும்’.

சிவில் அமைப்புகளாலான மக்கள் சக்திக்கு மணிக்கட்டுவது யார்? அல்லது தமிழ் மக்கள் பேரவை காத்திரமான பங்களிப்பைச் செய்வதற்கு தம்மை மறுசீரமைத்துக் கொள்ள சடுதியாக சுயபரிசோதனையில் ஈடுபடல் வேண்டும்.

– அருட்தந்தை மா. சத்திவேல்

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !